தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தமிழக-கேரள எல்லையை இணைக்கும் போடி மெட்டு மலைச்சாலையில் நள்ளிரவில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. சுண்டல் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஒன்று மரத்தில் மோதி நின்றது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், போடியை அடுத்த சாம்பலாறு, குரங்கணி, கொட்டக்குடி, பிச்சாங்கரை உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. இதனால் கொட்டக்குடி, குரங்கணி, கொம்புதூக்கி ஆறுகளில் நீர்வரத்து உயர்ந்தது. அணைப்பிள்ளையார் தடுப்பணை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போடி மெட்டு மலைச்சாலையின் 11-வது கொண்டை ஊசி வளைவில் நள்ளிரவு 1 மணியளவில் மண் சரிந்தது. இதையடுத்து இருமாநில வாகனங்களும் நிறுத்தப்பட்டன. குரங்கணி போலீசார் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து, இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றினர். பின்னர் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. குமுளி மலைச்சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டது.
வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். அந்தக் காரை நெடுஞ்சாலைத் துறையினர் காலையில் மீட்டனர். 17 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட போடி மெட்டு சாலை, 4,850 அடி உயரத்தில் அமைந்துள்ளது. போடி மெட்டு, குமுளி, கம்பம் மெட்டு உள்ளிட்ட மலைச்சாலைகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.























