இயக்குநர் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்த நாள். 5 படங்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் இன்றைக்கு இந்திய அளவில் முக்கிய இயக்குநராகக் கருதப்படுவதற்கு இவரது திரை மொழியும் ஆளுமையுமே காரணம். ஆங்கிலப் பட்டதாரியான இவர் கடலூரைச் சேர்ந்தவர். இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு உதவியாளராகப் பணிபுரிந்த இவர் ‘அது ஒரு கனாக்காலம்’ மற்றும் கதை நேரம் குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். பாலு மகேந்திராவின் உதவி இயக்குநர் என்பதோடு இலக்கிய வாசிப்பு மற்றும் உலகத் திரைப்பட அறிவைக் கொண்டு கலையம்சம் கூடிய திரைப்படைப்பை வழங்க வேண்டும் என்கிற மூர்க்கத்துடன் படம் இயக்க வந்தார் வெற்றிமாறன். இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் திரைத்துறை வணிகம் சார்ந்துதான் இயங்க முடியும். ஏனென்றால் அதற்கு மிகப்பெரும் பொருட்செலவு தேவைப்படுகிறது. ஆகவே அந்த வியாபார வெற்றியைக் கருத்தில் கொண்டு திரைப்படம் எடுத்தால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.
இவரது முதல் திரைப்படமான ‘பொல்லாதவன்’ படத்தில் அதனை கவனமாகக் கையாண்டிருப்பார். தமிழ் சினிமாவுக்கான வணிக அம்சங்களான பாடல், நகைச்சுவை போன்றவற்றை உட்புகுத்தி அவருக்கான சினிமாவை எடுத்திருப்பார். ‘ஆடுகளம்’ திரைப்படம் மனித மனத்தின் வன்மம் எந்த எல்லை வரை செல்லும் என்பதைக் காட்டியது. இத்திரைப்படத்துக்காக அவரும், நாயகன் தனுஷும் தேசிய விருது பெற்றனர். இவரது ஐந்து படங்களில் நான்கின் நாயகனான தனுஷுக்குள் இருக்கும் நடிப்பாற்றலை துல்லியமாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் என செல்வராகவனையும் வெற்றிமாறனையும்தான் சொல்ல முடியும். தமிழில் ஓர் இலக்கியப் படைப்பைத் திரைப்படமாக்கி வெற்றியும் பெற முடியும் என்பதை சமீபத்தில் அழுத்தமாக நிருபித்தவர் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி இவர் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் நூறு கோடியைத் தாண்டி வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவி அதே பெயரில் சூர்யாவை வைத்து இயக்கி வருகிறார் வெற்றிமாறன். தமிழ் திரைப்பட ஆர்வலர்கள் பலருக்கும் ஆதர்ச இயக்குநராக விளங்கும் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்த நாள். டாட்ஸ் நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!
























