இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியுள்ள விடுதலை திரைப்படத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையைக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, பாவக்கதைகள் ஆந்தாலஜியில் ‘ஓர் இரவு’ என்கிற சிறுகதையை இயக்கிய அவர் அதன் பிறகு இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் சூரி முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் ”விடுதலை படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு, நான்கு மணிநேரம் இளையராஜா சார் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார் . தனுஷ் கொஞ்சம் கூட டயர்ட் ஆகல” என்று கூறியுள்ளார். வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் இடையிலான நட்பு மெச்சத்தக்கது. தன்னுடைய திரைப்படத்தில் ஏதேனும் ஒரு விதத்திலாவது தனுஷின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதனால் தனுஷ் பாட வைக்கப்பட்டிருக்கிறார். இளையராஜா இசையில் தனுஷ் பாடியதைக் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
























