தான் சிறைபட்ட காவல் நிலையம் குறித்து அதன் ரிவீவ் பகுதியில் ஜாலியாக கமெண்ட் செய்த ஒருவரை காவல் ஆணையர் விஜயகுமார் ட்விட்டரில் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
வலைதளங்களில் ஊடகங்களாலோ, அரசியல் அல்லது சினிமா பிரபலங்களாலோ அல்லது தனி நபர்களாலோ பதிவிடப்படும் இடுகைகளுக்கு செய்யப்படும் கமெண்டுகள் சில சமயம் ’ஹே..எப்புட்ரா’ என்று கேட்கும் அளவிற்கு நகைச்சுவையாகவும், ஆழ்ந்து சிந்திக்கும் வகையிலும் கிரியேட்டிவாக அமைந்துவிடும்.
அந்த வகையில், காவல் நிலையத்தில் தான் மாட்டிக்கொண்டது குறித்து அதன் இணையதளப் பக்கத்தில் ஒரு நபர் நகைச்சுவையாக கமெண்ட் செய்ய, அவரது கமெண்டை புகைப்படம் எடுத்து, அவரைப் பாராட்டி ஆவடி காவல் ஆணையர் விஜயகுமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ்வரன் என்ற அந்த நபர் திருமுல்லைவாயல் T10 காவல் நிலையத்தின் இணையதளப் பக்கத்தில் உள்ள Review பகுதியில், ”நள்ளிரவு நேரத்தில், தேவையான ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த குற்றத்திற்காக நான் இந்த காவல் நிலையத்தில் சிறைபடுத்தப்பட்டேன். காவல் நிலையம் மெயின் ரோட்டின் அருகிலும், சுத்தமாகவும் இருந்தது. அங்கிருந்த காவலர்கள் மிகவும் கனிவாக நடந்துகொண்டனர்; என்னிடம் எந்த விதத்திலும் தவறாக நடக்கவில்லை. வாகனம் குறித்த தேவையான ஆவணங்களை நான் காண்பித்ததும் என்னுடைய கைரேகையை மட்டும் வாங்கிக்கொண்டு, எந்த லஞ்சமும் வாங்காமல் என்னை விட்டுவிட்டனர். வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டிய இடம் இது” என்று ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார்.
இதை புகைப்படம் எடுத்து, ஆவடி காவல் ஆணையர் விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”உங்களின் வேடிக்கையான விமர்சனத்திற்கு நன்றி. நாங்கள் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் மிகவும் தேவையான பொழுதுபோக்கையும் வழங்குகிறோம். உங்களுக்கு எப்போதாவது தீவிரமான காவல் தொடர்பான உதவி தேவைப்பட்டால் 24*7 -7305735666 என்ற எண்ணை அழைக்கவும். ஆவடி காவல் ஆணையரகம்” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்நபரின் நகைச்சுவைத் திறன் குறித்து பலரும் அப்பதிவில் கருத்திட்டு வருகின்றனர்.


























