நடிகர் அஜித்குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் காலமான நிலையில், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மனைவி மோகினியுடன் வசித்துவந்த நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்துவந்ததாகவும், இன்று காலை தூக்கத்தில் அவரது உயிர் பிரிந்ததாகவும் நடிகர் அஜித் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த தனது இரங்கலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன். தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் பதிவில், ”தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்,தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், ”பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.P.சுப்ரமணியம் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தமது தந்தையை இழந்து தவிக்கும் திரு.அஜித் குமார் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அஜித்தின் தந்தை மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வி.கே.சசிகலா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


























