அரசுத் துறைகளில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின்படி, சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்குத் தற்காலிகப் பணியாளர்களைத் தேர்வு செய்ய, ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகள் மூலம் நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு, இருக்கும் பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். வெளி முகமை மூலம் நியமித்தால் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு என்ன வேலை என்றும் வினவினார்.
ஒப்பந்த முறையில் நியமிக்கப்படுவோருக்கு அரசு ஊழியர்களுக்கான ஊதியம், பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்காது என்றும், இடஒதுக்கீடும் பறிபோகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும் என்பது அவரது கருத்து.












