மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் தண்ணீர் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே நடந்த மோதலில் 25 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் மையப் பகுதியில் உள்ள குளத்தில் கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டச் சென்ற கிரேடா சமூகத்தவருக்கும், குகா சமூகத்தவர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது முற்றியதில் கிரேடா சமூகத்தைச் சேர்ந்தவர் சுட்டதில் குகா சமூகத்தவரின் காலில் காயம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை வெடித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஹட்ஜர்-லாமிஸ், பார் எல் கசல் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 39 பேர் கைது செய்யப்பட்டு தலைநகர் என்ஜாமேனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படும் ஆப்பிரிக்க நாடுகளில் சாட்டும் ஒன்று என ஐ.நா. குறிப்பிடுகிறது. 2024-ல் அங்கு 10 சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களுக்கே பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரலில் கிழக்கு சாட்டில் கிணற்றுத் தண்ணீர் தொடர்பான மோதலில் 44 பேர் உயிரிழந்தனர்.












