ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று காரின் குறுக்கே பாய்ந்து சாலையைக் கடந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இன்று (திங்கள்) அதிகாலை ஒரு கொண்டை ஊசி வளைவில் கார் சென்றபோது, சாலையோரத் தடுப்புச் சுவரில் அமர்ந்திருந்த சிறுத்தை திடீரென கீழே குதித்து காருக்கு மிக அருகில் ஓடிக் கடந்தது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும் பயணிகளும் உடனே வாகனத்தை நிறுத்தினர். காட்சிகளை காரில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன; தமிழ்நாடு-கர்நாடகா இடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. யானை, சிறுத்தை, மான் போன்றவை சாலைக்கு வருவது வழக்கம்.
சமீபகாலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது, விலங்குகளைப் படம் பிடிக்கவோ தொந்தரவு செய்யவோ கூடாது என்று வனத்துறை எச்சரித்துள்ளது. இரவில் கவனமாகப் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












