திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் இருப்பதாக விமர்சித்துள்ளார். 'கடினமான காலங்களுக்குத் தயாராகுங்கள்' என்றும் தமது எக்ஸ் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை தாம் கடந்து வந்த இரு செய்திகளை அவர் சுட்டிக்காட்டினார். ஒன்று, ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தமிழ்நாடு தேசிய சராசரிக்கும் கீழே உள்ளது. மற்றொன்று, தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.1,614 கோடி மதிப்பிலான கொரிய முதலீடுகள் அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன என்பது.
முதலீடுகளை ஈர்ப்பதில் பெருமை சேர்த்த 'கைடன்ஸ் தமிழ்நாடு' அமைப்பு, இந்த ஆட்சியில் தனிநபர்களின் தன்முனைப்புக்குப் பலியாகிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாகப் பின்னோக்கிச் செல்வது எப்படி என்பதை இவர்களிடம்தான் கற்க வேண்டும் என்று கிண்டலாகக் கூறிய அவர், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் முதல்வர் கையசைத்துக் காட்டச் செல்கிறார் என்றும் விமர்சித்தார்.












