வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாக உணவக உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
தரணம்பேட்டையில் உணவகம் நடத்தும் ரஃபிக் (48) சில நாட்களுக்கு முன் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தார். அதை வழங்க வந்த டெலிவரி ஊழியரிடம் இரண்டு ரூ.500 நோட்டுகளைக் கொடுத்தார். அவை கள்ள நோட்டுகள் என்பதை அறிந்த ஊழியர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில் ரஃபிக்கின் உணவகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.50,000 கள்ள நோட்டுகள் சிக்கின. அவர் அளித்த தகவலின்படி, தங்கம் நகரைச் சேர்ந்த ஜிபேர் அகமதுவிடம் ரூ.20,000, டி.டி.மோட்டூரைச் சேர்ந்த காமராஜ் மற்றும் சங்கராபுரத்தைச் சேர்ந்த கோபாலிடம் தலா ரூ.25,000, ஆம்பூரைச் சேர்ந்த பாபுவிடம் (65) ரூ.30,000 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ள நோட்டுகள் மேற்கு வங்கத்திலிருந்து வாங்கி வரப்பட்டு உள்ளூரில் புழக்கத்தில் விடப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மேற்கு வங்கத்தில் இதே வழக்கில் பாபு கைதாகி சிறையில் இருந்ததும் தெரிந்தது; அப்போதைய தொடர்புகள் மூலம் மீண்டும் நோட்டுகள் பெற்றாரா என்றும் விசாரிக்கப்படுகிறது. விநியோகித்தவர்கள் யார், வேறு யாருக்கு வழங்கப்பட்டது என்பதும் விசாரணையில் உள்ளது.












