அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நவம்பர் 1-ம் தேதி இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டினிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் புறப்பட்ட 'லியர்ஜெட் 60' ரக தனியார் விமானம், புளோரிடாவின் தெற்குப் பகுதிக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்து வெடித்தது. இதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
விமானம் நிமிடத்துக்கு 10,000 முதல் 20,000 அடி வரை கீழிறங்குவதாக விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தெரிவித்துள்ளார். 'மே டே' அழைப்பு விடுத்த அவர், விமானம் தரையில் விழப்போவதாகக் கூறிய சில விநாடிகளில் விபத்து நடந்தது.
தகவல் அறிந்ததும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பயணிகள் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












