இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு நாள் விழா நேற்று (நவம்பர் 1) சென்னை அருங்காட்சியக அரங்கில் நடந்தது. அதில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மூலம் ஒருவர் அந்தப் பதவிக்கு ரூ.5 கோடி தர முன்வந்ததாகவும், அதை ஏற்க மறுத்ததாகவும் கூறினார். பணம் தர முன்வந்தவர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை; அவரைக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகின்றன.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தினகரன், அமைச்சரே இதனை வெளிப்படையாகக் கூறிய பிறகும் இதுவரை நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டார். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்பதை அரசு உணர வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே கடுமை காட்டப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
பேரம் பேசியவர் யார் என்பதை அரசு வெளியிட வேண்டும் என்றும், இடைத்தரகராகச் செயல்பட்ட லயோலா மணி மற்றும் இவ்விவரத்தை இதுவரை மறைத்த அமைச்சர் ராஜ்மோகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் கோரியுள்ளார்.













