பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தில், 12 வயது சிறுமியுடன் பழகி வந்த 21 வயது கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை தலைமறைவாகியுள்ளதால் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
உயிரிழந்தவர் அதே ஊரைச் சேர்ந்த அபிமன்யூ. அவர் சிறுமிக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் தந்தையும், கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பாலசுப்பிரமணியனுக்குத் தெரியவந்தது.
இன்று (திங்கட்கிழமை) பாலசுப்பிரமணியன் அபிமன்யூவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அது முற்றியதில் இரும்பு ராடால் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவரின் இடது மார்பில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த அபிமன்யூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பாலசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












