திபெத்தில் நேற்றிரவு (அக்டோபர் 22) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 350 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
நாக்சு பிராந்தியத்தின் பாகேன் கவுண்டியில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் நள்ளிரவில் ஏற்பட்டது. அதையடுத்து, 5.2 வரையிலான 7 முக்கிய அதிர்வுகள் உட்பட 400-க்கும் மேற்பட்ட பின்னதிர்வுகள் பதிவாகியுள்ளன. பின்னதிர்வுகள் பூமிக்கடியில் வெறும் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சீன அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.
மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கிய 65-க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு உயரும் அச்சம் எழுந்துள்ளது. மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையால், சுமார் 12 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 மீட்டர் உயரத்தில் உள்ள திபெத், "உலகின் கூரை" எனப்படுகிறது. இந்தியத் தட்டு தொடர்ந்து ஆசியத் தட்டை நோக்கி நகர்வதால் ஏற்படும் அழுத்தத்தால், திபெத், நேபாளப் பகுதிகளில் அடிக்கடி பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்தத் தட்டு நகர்வின் ஆற்றல் வெளிப்பாடே தற்போதைய நிலநடுக்கத்துக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.



















