குளிக்க அனுமதி இல்லை: கனமழையால் நீர்வரத்து பெருகியதைத் தொடர்ந்து, பெரியகுளம் அருகிலுள்ள கும்பக்கரை அருவிக்கு வரும் பயணிகளுக்கு வனத்துறை தற்காலிகத் தடை விதித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) இத்தடை அமலில் உள்ளது.
கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலையிலும் கொடைக்கானல் மலையிலும் பரவலாக மழை கொட்டுகிறது. அதன் விளைவாக, தேனி மாவட்டத்தில் உள்ள இந்த அருவியில் தண்ணீர் திடீரெனப் பெருக்கெடுத்து ஓடுகிறது. வடகிழக்குப் பருவமழை வலுப்பெற்றுள்ளதால், தேனி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவித்துள்ளது.
வெள்ளம் குறைந்து நிலைமை சீரான பிறகே பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனச்சரக அலுவலர் குறிப்பிட்டார். இதற்கிடையே, கொட்டகுடி ஆற்றுப் படுகைகளுக்கும் அருவிப் பகுதிக்கும் மக்கள் செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.























