மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் ஆணையர்கள் ஷுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அமைச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதனுக்குத் தனித்தனியே கடிதம் எழுதியது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. இந்தக் கடிதங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி எழுதப்பட்டவை.
கடிதங்களில் இருவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகள்:
– துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் விடுப்பில் சென்றதால், நிர்வாகப் பிரிவின் கூடுதல் பொறுப்பு மணீஷ் கார்க்குக்கு வழங்கப்பட்டது. பொறுப்பேற்ற சில மணி நேரத்திலேயே மூத்த அதிகாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டை அவர் மாற்றி உத்தரவிட்டார்.
– ஆணையத்திடமோ தொடர்புடைய அதிகாரிகளிடமோ முன்கூட்டியே ஆலோசிக்காமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன.
– அவரது செயல்பாடுகள் விதிகளுக்குப் புறம்பானவை.
– நிர்வாகப் பிரிவிடம் கேட்கப்பட்ட கோப்பை அணுக அனுமதி மறுக்கப்பட்டது.
கடிதம் கிடைத்ததாக அமைச்சரவைச் செயலர் பதிலளித்துள்ளார். ஆனால், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லது விசாரணை குறித்த தகவல் ஆர்டிஐ பதிலில் இடம்பெறவில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராடி வருகின்றன. தலைநகர் டெல்லியில் இப்போராட்டம் தீவிரமடைந்தது. முக்கிய முடிவுகளில் தலைமைத் தேர்தல் ஆணையருடன் இரு ஆணையர்களும் முரண்பட்டதாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியை, தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது.























