கோவையில் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக மாற்றப்படுவதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 15 வயது மாணவர், பள்ளியில் எதிர்கொண்ட சாதிய பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யாத "டம்மி அரசை" வன்மையாகக் கண்டிப்பதாக உதயநிதி கூறினார்.
மாணவர்களின் உணவுப் பழக்கம் குறித்து அந்தப் பள்ளியில் கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் மாட்டிறைச்சி உண்பதாக அந்த மாணவர் கூறியதாகவும், அதைத் தொடர்ந்து சாதிரீதியான கொடுமைக்கு உள்ளானதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக, முற்போக்கு அமைப்புகள், மாணவரின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் போராட்டம் நடத்திய பிறகே காவல்துறை வழக்குப் பதிவு செய்தது என்றும், மாணவரின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் உதயநிதி கோரியுள்ளார்.























