ஜப்பானின் அயிச்சி மாகாணம் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் 5-ம் நாளில், இந்திய வீரர், வீராங்கனைகள் மூன்று உலக சாதனைகளைப் படைத்தனர். இந்தியா வென்ற மொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையும் அதிகாரப்பூர்வமாக 100-ஐத் தாண்டியது. போட்டிகள் 18-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் SH1 பிரிவில் மோனா அகர்வால் 357.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இது புதிய உலக சாதனை. சீனாவின் குயிப்பிங் ஜாங் 3.8 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கினார். இந்தத் தொடரில் மோனாவுக்கு இது இரண்டாவது தங்கம்; ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் சந்தீப் குமார் 52.28 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். சவூதி அரேபியாவின் நூர் அல்சானாவின் சாதனையை முறியடித்து, T44 பிரிவில் புதிய உலக சாதனையும் படைத்தார். இதே போட்டியில் அஜய் குமார் 53.61 வினாடிகளில் வெண்கலம் வென்றார்.
ஆடவர் ஈட்டி எறிதல் F37 பிரிவில் ஹேனி தனது இறுதி முயற்சியில் 60.49 மீட்டர் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். இது அவரது இரண்டாவது பதக்கம்; இதற்கு முன் வட்டு எறிதலில் வெண்கலம் வென்றிருந்தார்.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் SL3 இறுதியில் நிதேஷ் குமார், பிரமோத் பகத்தை வீழ்த்தித் தங்கம் வென்றார்; பிரமோத் பகத்துக்கு வெள்ளி கிடைத்தது. வில்வித்தை ஆடவர் ரிகர்வ் குழுப் பிரிவில் ஹர்விந்தர் சிங், விஜய் சுண்டி இணை சீனாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தித் தங்கம் வென்றது.





















