நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தைக் கண்காணிக்க, மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு நடத்தின. மருந்தகங்கள், மருத்துவமனைகள், உற்பத்தி அலகுகளிலிருந்து சீரற்ற முறையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டன.
இவற்றில் 42 மாதிரிகள் மத்திய மருந்து ஆய்வகங்களிலும், 288 மாதிரிகள் மாநில அரசு ஆய்வகங்களிலும் தரமற்றவை என உறுதியாகின. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) நடத்தும் வழக்கமான மாதாந்திரக் கண்காணிப்பின் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் இதில் கணிசமான அளவு இடம்பெற்றுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.





















