புதுச்சேரியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகமும் பணப் பரிவர்த்தனைகளும் அடுத்த 6 மாதங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
புதுச்சேரி நேரு வீதியில் இயங்கும் இந்த வங்கியில், அரசு ஊழியர்கள் தங்கள் சம்பள அடிப்படையில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தி வந்தனர். முந்தைய நாள் மாலை சுமார் 3 மணிக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குழு வங்கிக்கு வந்து வரவு-செலவு உள்ளிட்ட நிதி நிலவரத்தை ஆய்வு செய்தது. வங்கியின் நிதி நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதை அவர்கள் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் எந்தப் புதிய பரிவர்த்தனையும் நடைபெறாதவாறு வங்கி மூடி சீல் வைக்கப்பட்டது.
வங்கி நிர்வாகத்தில் முறைகேடுகள் அல்லது நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால், அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முடக்க காலத்தில் வாடிக்கையாளர்களின் அவசரத் தேவைகளுக்காக, கணக்கு வைத்துள்ள ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலையான வைப்பு உள்ளிட்ட பிற பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களும் கணக்குதாரர்களும் கவலையில் உள்ளனர்.




















