சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் குளிர்சாதன (ஏ.சி.) மின்சார ரெயில் சேவை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. டிசம்பர் 24-ம் தேதி வரை இந்தச் சோதனை ஓட்டம் நடைபெறும். சனி, ஞாயிறு தவிர வாரத்தின் மற்ற 5 நாட்களில் ரெயில் இயக்கப்படும்.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி முதல்கட்டமாக ஏ.சி. மின்சார ரெயில் தொடங்கப்பட்டு, பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ட்ரல் – அரக்கோணம் பாதைக்கான ஏ.சி. ரெயில் கடந்த பிப்ரவரியில் தெற்கு ரெயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு, தொழில்நுட்ப வசதிகள், சோதனை ஓட்டங்கள் முடிந்த பின் இப்போது பயணிகள் பயன்பாட்டுக்கு வருகிறது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் பயணம் செய்யலாம்.
நேர அட்டவணை: சென்ட்ரலில் இருந்து மாலை 6.30-க்குப் புறப்படும் ரெயில் இரவு 7.55-க்கு அரக்கோணம் சந்திப்பை அடையும். அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு, திருவள்ளூருக்கு 8.30-க்கும், சென்ட்ரலுக்கு 9.30-க்கும் வரும். திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ஆகிய நிறுத்தங்களில் நிற்கும். மேலும், ஆவடியில் இருந்து காலை 6.30-க்குப் புறப்பட்டு 7.45-க்கு அரக்கோணம் செல்லும் சேவையும், சென்ட்ரலில் இருந்து காலை 9.40-க்குப் புறப்பட்டு 10.25-க்கு ஆவடி செல்லும் சேவையும், ஆவடியில் இருந்து மாலை 5.25-க்குப் புறப்பட்டு 6.10-க்கு சென்ட்ரல் வரும் சேவையும் உண்டு.
கட்டணம் தூரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது: 1-10 கி.மீ. ரூ.35, 11-15 கி.மீ. ரூ.40, 16-25 கி.மீ. ரூ.60, 26-35 கி.மீ. ரூ.85, 46-50 கி.மீ. ரூ.95, 51-55 கி.மீ. ரூ.100, 56-60 கி.மீ. ரூ.105, 61-65 கி.மீ. ரூ.115, 66-70 கி.மீ. ரூ.120.




















