அரிசி விலையை சந்தையில் கட்டுக்குள் வைக்கும் முயற்சியாக, செங்கல்பட்டு மாவட்டத்திலும் மலிவு விலை சன்ன ரக அரிசி விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஒரு கிலோவுக்கு ரூ.30 என நிர்ணயிக்கப்பட்ட இந்த அரிசி, 5 கிலோ பொட்டலங்களாக விற்கப்படுகிறது.
வண்டலூர் அருகேயுள்ள ரத்தினமங்கலம் நியாயவிலைக் கடையில் நடந்த விழாவில், அமைச்சர் த.சரத்குமார் முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தார். ஆட்சியர் மு.வீரப்பன் தலைமை தாங்கினார்.
தனியார் ஆலைகள் உட்பட பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்த அரிசியே இவ்வாறு வழங்கப்படுகிறது. அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் மாநிலம் முழுவதும் செயல்படும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த மாவட்டத்துக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் மூன்று கடைகளில் மட்டுமே இது கிடைக்கும்:
நங்கநல்லூர் முதல் பிரதான சாலையிலுள்ள ஜெ.ஜெ. நங்கநல்லூர் தொடக்கக் கூட்டுறவு பண்டகசாலை; ஆதம்பாக்கம் கேசரி நகரிலுள்ள கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையின் சிறு அங்காடி; கல்பாக்கத்திலுள்ள அணுசக்தித் துறை பணியாளர் கூட்டுறவு பண்டகசாலை.



















