சமூக ஊடகங்களில் ஏஐ மூலம் உருவாக்கிய காட்சிகளைப் பகிர்வதற்கு எதிராக பெங்களூரு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக அரசின் விதான சவுதா கட்டடத்தை சுட்டு வீழ்த்துவதாகச் சித்தரிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒருவர் கைதானதே இதற்குக் காரணம்.
கைதானவர் பிஹாரைச் சேர்ந்த 25 வயது ஹஸ்ரத் அலி; பெங்களூருவில் கட்டுமானத் தொழிலாளி. அக்டோபர் 20-ல் அவர் பகிர்ந்த ரீல்ஸ் இணையவாசிகளிடையே கண்டனத்தைப் பெற்றது. வழக்கறிஞர் அபினவ் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவாகி, நேற்று அவர் கைது செய்யப்பட்டார். வீடியோவும் அவரது கணக்கும் நீக்கப்பட்டு முடக்கப்பட்டன.
"அரசு சின்னங்களை அவமதிக்கும், பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பதுபோல் காட்டும் ஏஐ ரீல்ஸ், படங்களை உருவாக்கினால் அது சட்டப்படி குற்றம்" என்று போலீசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

















