அமுதம் கூட்டுறவுக் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்கப்படும் "சன்னரக அரிசி" தரமற்றதாக இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைதளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தில், அரிசியின் தரம் மோசமாக இருப்பதால் விற்பனை மந்தமாகி மூட்டைகள் தேங்கியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஒரு நியாய விலைக் கடையில், அந்தத் தொகுதி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா தொடங்கிவைத்த விற்பனையில், ரேஷன் அரிசியையே கிலோ ரூ.30-க்கு விற்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி, அதைத் திருப்பி ஒப்படைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடக்க விழாவைப் பிரம்மாண்டமாக நடத்திய அமைச்சர்கள் அரிசியின் தரத்தைப் பரிசோதித்தார்களா என்றும், இலவச ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து சன்னரக அரிசி என விற்று மக்களை ஏமாற்ற முயல்கிறார்களா என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், தரமான சன்னரக அரிசி மக்களுக்குச் சென்றடைவதை உறுதிசெய்யவும் வேண்டும் என அவர் தவெக அரசைக் கேட்டுக்கொண்டார்.


















