கோவையில் 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் முதியவர் ஒருவரை மோசடிக் கும்பல் 4 நாட்கள் வீட்டிலேயே முடக்கி வைத்த சம்பவம் தெரியவந்துள்ளது. அவர் சைபர் கிரைம் காவல் நிலையத்துக்குச் சென்றதால், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1 கோடி தப்பியது.
மத்திய புலனாய்வு அமைப்பின் உயர் அதிகாரிகள் எனக் கூறி அந்தக் கும்பல் முதியவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டது. அவரது ஆதார் அட்டை மோசடிகளுக்கும் தேசவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும், வங்கிக் கணக்கு சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைக்குப் பயன்பட்டதாகவும் மிரட்டி, அவரை 'டிஜிட்டல் கைது' செய்துள்ளதாகத் தெரிவித்தது. வீடியோ அழைப்பில் தொடர்ந்து கண்காணித்து, வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
வங்கியில் பணம் எடுத்து வருவதாகக் கூறி வெளியே வந்த முதியவர், பதற்றத்துடன் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு விசாரித்தபோதே அவர் 4 நாட்களாக மிரட்டலுக்கு ஆளானது தெரியவந்தது.
போலீசார் கூறுகையில், ஓய்வூதியமும் சேமிப்பும் வைத்திருக்கும் முதியவர்களே இத்தகைய கும்பல்களின் முக்கிய இலக்காக உள்ளனர். சீருடை அணிந்தவர்கள் வீடியோ அழைப்பில் மிரட்டினால் உடனே அழைப்பைத் துண்டித்து, உள்ளூர் காவல் நிலையத்தை அணுக வேண்டும். வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்கள் வழியாக வரும் ஆன்லைன் பங்குச்சந்தை திட்டங்களை நம்பக்கூடாது. மோசடி நடந்த முதல் சில மணி நேரத்துக்குள் புகார் அளித்தால் மட்டுமே பணத்தை முடக்கி மீட்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




















