ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கடற்கரையில் செல்ஃபி எடுத்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 மாணவிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோத்தரோட்டில் உள்ள சந்தைப்படுத்துதல் பயிற்சி மையத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 125 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வந்தனர். தசரா விடுமுறைக்காக அவர்களில் 100 பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், விடுதியில் தங்கியிருந்த 25 பேர் ஸ்ரீகாகுளம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள பெத்த கனகல்லவனிப்பேட்டை கடற்கரைக்குச் சென்றனர்.
இங்கு நாகாவலி ஆறு கடலுடன் கலக்கிறது. சேறு நிறைந்த இந்தப் பகுதி ஆபத்தானது என்பதால், அங்கு செல்லத் தடை விதித்து போலீசார் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.
விஜயநகரம் மாவட்டம் கெங்குவ கிராமத்தைச் சேர்ந்த மாதவி (19), கொல்லப்பள்ளி பவானி (19), பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் மாவுடியைச் சேர்ந்த மர்ரி மஹி (18) ஆகியோர் செல்ஃபி எடுத்தபோது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கினர். அப்போது வந்த ராட்சத அலை மூவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர்களைக் காப்பாற்ற முயன்ற விக்ரம் என்ற மாணவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.
தகவலறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் நீண்ட போராட்டத்துக்குப் பின் மர்ரி மஹி, பவானி ஆகியோரின் உடல்களை மீட்டனர். விக்ரம், மாதவி ஆகியோரின் உடல்கள் குண்டுவாணிபேட்டை கடற்கரையில் கரை ஒதுங்கியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















