குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 12-ம் நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் 20-ம் தேதி நள்ளிரவில் நடைபெற்றது; அதில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதற்கு மறுநாள் முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, குலசேகரன்பட்டினத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் கோவிலுக்குத் திரும்பிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றன.
12-ம் நாளான நேற்று காலை 6 மணி முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு பாலாபிஷேகமும், மலர் அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தன. முந்தைய நாள் இரவு முதல் அப்பகுதியில் கனமழை பெய்த நிலையிலும், பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மழையில் நனைந்தபடியே கோவிலுக்கு வந்தனர். விரதம் இருந்த ஏராளமானோர் காப்பு களைந்தனர்.
கார், பேருந்து, வேன்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்ததால் திருச்செந்தூர்–குலசை கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கோவில் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.


















