விமான எரிபொருள் மீதான மதிப்புக்கூட்டு வரியைக் (வாட்) குறைத்ததற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் மாநில அரசுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணைகளின்படி, சென்னை விமான நிலையத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் மீதான வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் இது 29 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகக் குறைகிறது. இந்தக் குறைப்பு நவம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து, அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை, அதாவது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும். இதனால் விமானக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா தனது சமூக ஊடகப் பக்கத்தில், இந்த வரிக் குறைப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளது. செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும் விமான இணைப்புகளை மேம்படுத்தவும் இது உதவும் என்றும், தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க ஆவலாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


















