குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு இல்லாமல் கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்த 17 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 10 அல்லது 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள்.
கிராமப்புறங்களிலும் தொழில்பேட்டைப் பகுதிகளிலும் போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளதாக ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ராஜ்கோட் கிராமப்புற போலீசின் சிறப்புப் படையும் உள்ளூர் போலீசாரும் கடந்த 22-ஆம் தேதி பல கிளினிக்குகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டமோ, மருத்துவக் கவுன்சில் பதிவோ இல்லாமல் செயல்பட்ட இந்த 17 பேரும் அப்போது பிடிபட்டனர்.
கிளினிக்குகளிலிருந்து அலோபதி மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் குஜராத் மருத்துவப் பயிற்சியாளர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




















