நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவரது பெற்றோரான தாய் மோகினி மற்றும் தந்தை சுப்பிரமணியம் ஆகியோர் சென்னையில் வசித்துவந்தனர். 85 வயதாகும் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் சில காலமாக உடல்நலத்தில் சுகமில்லாமல் இருந்துவந்த நிலையில், இன்று காலை அவர் இயற்கை எய்தினார்.
இதுகுறித்து நடிகர் அஜித்குமார் தனது சகோதரர்கள் அனூப் குமார் மற்றும் அனில்குமாருடன் இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், தந்தை சுப்பிரமணியம் பல நாட்களாக படுக்கையில், உடல்நலமின்றி இருந்துவந்ததாகவும், கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தூக்கத்தில் அவர் உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களது தந்தையரின் இறப்பு செய்தியைக் கேட்டு பலரும் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாகவும், தற்போதைய சூழலில் அதற்கு பதிலளிக்க முடியாதது குறித்து புரிந்துகொள்ள வேண்டியும், தங்களது தந்தையின் இறுதி சடங்குகள் குடும்ப நிகழ்வாக இருக்க கருதுவதாகவும், இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கவேண்டி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் மற்றும் அவரது குரும்பத்தினருக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கலை வலைதளங்கள் மூலம் தெரிவித்துவருகின்றனர். சுப்பிரமணியத்தின் இறுதிச்சடங்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.



























