தமிழ்நாடு அரசு மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை இன்று (அக்டோபர் 21) இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி ரூபேஷ் குமார் மீனா திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை முதன்மைச் செயலாளர் ஏ. கார்த்திக் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார். சென்னை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) ஐஜியாகப் பணியாற்றி வந்தவர் ரூபேஷ் குமார் மீனா. அவர் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் பதவிக்கு அனுப்பப்படுகிறார்.
அவர் வகித்து வந்த குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு சிஐடி ஐஜி பொறுப்பில், இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த என். காமினி, காவல்துறைத் தலைமை அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்புகளில் உடனடியாகப் பணியில் சேருமாறு மூவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.























