தமிழகத்தில் அக்டோபர் 26-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகக் கடலோரத்துக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதே இதற்குக் காரணம்.
இன்று (அக்.21) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை (அக்.22) தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கோவை, நீலகிரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். அக்டோபர் 23, 24 தேதிகளில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், 25-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 25-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மழையின்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் இடி மின்னலும் இருக்கும். சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், அக்டோபர் 24, 25 தேதிகளிலும் மணிக்கு 55 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அந்நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
























