பாலிவுட்டின் பிரம்மாண்டப் படமான ‘ராமாயணா’வில் இருந்து ‘ராவணா தாண்டவம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்பாடலை, தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர். ராவணன் கதாபாத்திரத்தின் வலிமையை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
இருவரும் சேர்ந்து பாடுவது இது முதல் முறையல்ல. சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ (2022) படத்தில் இமான் இசையில் ‘வாடா தம்பி’ பாடலை இருவரும் பாடியிருந்தனர். இம்முறை ரஹ்மான் இசையில் இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் சுமார் ரூ.800 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடிக்கின்றனர். ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மரும் ரஹ்மானும் இணைந்து படத்துக்கு இசையமைக்கின்றனர்.
முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 அன்று வெளியாகிறது; இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஜூலையில் வெளியான முதல் டிரெய்லரின் கிராபிக்ஸ் காட்சிகள் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அண்மையில் வெளியான புதிய டிரெய்லர் அக்குறைகளைச் சரிசெய்ததாகக் கூறப்படுகிறது. வெளியீட்டுத் தேதி நெருங்குவதால் படக்குழு விளம்பரப் பணிகளில் தீவிரமாக உள்ளது.






















