மதுரை அருகே சமயநல்லூரில் ரவுடியாக அறியப்பட்ட சூர்யா (26) மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். 'குட்டிசாக்கு' என்று அழைக்கப்பட்ட இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நேற்று (ஞாயிறு) இரவு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் அவர் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் புகுந்த கும்பல் அவரை வெட்டியது. தப்பியோட முயன்றவரைத் துரத்திச் சென்று தாக்கியதுடன், முகத்தையும் சிதைத்துவிட்டுத் தப்பியது. சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் உடலைப் பார்த்து சமயநல்லூர் காவல் நிலையத்துக்குத் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழைய பகை அல்லது தொழில் போட்டி காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கும் போலீசார், வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.












