வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 23) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகம், கேரளப் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. அங்குள்ள வளிமண்டல சுழற்சியிலிருந்து கேரளா வழியாக வடக்கு தமிழகக் கடலோரப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும் நீடிக்கிறது.
இதன் காரணமாக, இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் நெல்லை, குமரி மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யலாம். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. ஈரோடு, சேலம், மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை இருக்கும்.
வரும் 25-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலும், 26-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


















