செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே லாரியில் அடைத்துக் கடத்தப்பட்ட 25 மாடுகளை போலீசார் மீட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை, நீட்டிக்கப்பட்ட சரக்குப் பெட்டியுடன் சென்ற லாரியின் பின்புறத்திலிருந்து சாணமும் சிறுநீரும் வெளியேறுவதைக் கண்ட சாய் விக்னேஷ் என்பவர், மாடுகள் கொண்டு செல்லப்படுவதாகச் சந்தேகித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார்.
போலீசார் லாரியைப் பின்தொடர்ந்து பழவேலி அருகே மடக்கினர். சோதனையில் 25 மாடுகள் நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு இறைச்சிக்காக அவை கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுநர் கூறியதாகத் தெரிகிறது. மூக்கணாங்கயிறுகள் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்ததாகவும், உணவு, தண்ணீர், காற்றோட்டம் இன்றி மாடுகள் தவித்ததாகவும் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட மாடுகள் சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. ஆல்மைட்டி அனிமல் கேர் அறக்கட்டளை அளித்த புகாரில், மாடுகளைத் துன்புறுத்தி ஏற்றிச் சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.













