தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரில் வீடு புகுந்து பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், பரோட்டா மாஸ்டரான ஞானபிரகாஷ் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்து மாயமான இரு சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் மேரி ரெஜிலா. அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன், மகன் பிளஸெட் ராஜா ஆகியோரும் அரிவாளால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு 15 வயதுடைய இரு மகள்களும் வீட்டில் இல்லை. அவர்கள் கடத்தப்பட்டார்களா, கொலையில் ஈடுபட்டது ஒருவரா அல்லது கும்பலா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இறுதியில் ஆனந்தபுரம் பகுதியில் பூட்டப்பட்ட இருட்டு அறையிலிருந்து இருவரும் மீட்கப்பட்டனர்.
தென்மண்டல ஐ.ஜி. விஜேந்திர பிதரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஞானபிரகாஷே கொலையைச் செய்து சிறுமிகளைக் கடத்திச் சென்றதாகவும், அவரது வீட்டில் இருந்த சிறுமிகளை மீட்டதாகவும் தெரிவித்தார். தலைமறைவான அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
மாவட்ட எஸ்.பி. சிவநாதன் அளித்த விளக்கத்தின்படி, தனது 15 வயது மகளுடன் ஞானபிரகாஷுக்கு இருந்த பழக்கத்தை மேரி ரெஜிலா கண்டித்ததே கொலைக்குக் காரணம்.
இந்தச் சம்பவம் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், இது காவல்துறையின் தோல்வி என்று குறிப்பிட்டு, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.





















