தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கப்படும் மாதாந்திர எதிர்பாராச் செலவு நிதியைப் பல மடங்கு உயர்த்தி, அதற்காக ஆண்டுக்கு 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் காவல் நிலையங்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு இதுவரை மாதம் ரூ.3,750, ரூ.6,000, ரூ.8,250 என வழங்கப்பட்டு வந்த தொகை, இனி முறையே ரூ.30,000, ரூ.40,000, ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
காவல்துறையின் நிர்வாக மற்றும் செயல்பாட்டுப் பணிகள் அதிகரித்துள்ளதால் அன்றாடச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன என அரசு அறிக்கை குறிப்பிடுகிறது. போதிய நிதி இல்லாதபோது இச்செலவுகளுக்கு அதிகாரப்பூர்வமற்ற வழிகளை நாட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், நிதியை உயர்த்துவதன் மூலம் அச்சார்பு குறைந்து லஞ்சம், ஊழல் தடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் முதல்வரின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, 2026-27ஆம் ஆண்டுக்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது இந்த நிதி உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அதைச் செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியாகியுள்ளது.
சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, இணையவழிக் குற்றங்களைக் கையாளுதல் ஆகியவற்றில் காவல்துறை முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.























