முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான செய்திகள் பரப்பப்பப்படுவதாகவும் அதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழங்கியிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு நீர் வழங்கும் முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது என்றும் அதனை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்கிற குரல் கேரள அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்தது. இதன் தொடர்பாக இரு மாநில எல்லைகளில் வசிப்பவர்களிடையே கலவரமும் நடைபெற்றது.
அணை பாதுகாப்பாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட பிறகு அப்பிரச்னை தீர்ந்தது. 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பல செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் ஆதாரமற்ற செய்திகளே அதிகம். கேரள திரை பிரபலங்கள் கூட இது பற்றி பேசி சர்ச்சையானது. மலையாள நடிகர் ப்ரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உண்மை மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த 125 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை செயல்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நமது அரசியல் பொருளாதார காரணங்களை தள்ளி வைத்துவிட்டு எது சரியோ அதனை செய்ய வேண்டும்’ என்று ட்வீட் செய்யவே அதனை எதிர்த்து தேனியில் அவரது உருவப்படம் எரிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 141 அடிக்கு மேல் உயர்த்தினாலும் அணை பாதுகாப்பாகவே இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது; மேலும் அணையை திவிரமாக கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.தமிழகத்திற்கு தேவையான நீர் கிடைக்க கேரள அரசு உறுதியளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு வாதத்தை முன்வைத்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அணையின் நீர் அளவு அபாய கட்டத்தில் இல்லாதபோது தற்போது இதை பற்றிப் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது? என கேள்வியெழுப்பியிருக்கிறது.
























