இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் ‘உடன்பிறப்பே’ அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ‘ரஜினி முருகன்’ போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். சசிக்குமாருக்கு ஜோடியாக இத்திரைப்படத்தில் மிர்னாளினி ரவி நடித்துள்ளார். சசிக்குமாருடன் சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளிவரவிருந்த இத்திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போய் தற்போது வெளிவரவிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள அண்ணாத்த, விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிம் ஆகிய திரைப்படங்கள் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகவிருக்கிறது. மாநாடு வெளியாவதாக இருந்த நிலையில் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. ஓடிடி தளங்களில் அமேசானில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும், ஹாட்ஸ்டாரில் இத்திரைப்படமும் குறிப்பிடத்தக்கது.
























