அக்டோபர் மாதம் வருகிற 10-ஆம் தேதி தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்கான தேர்தல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார்.
பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால், அவர் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை பலரும் விரும்பவில்லை. சிலர் நேரடியாகவே இதனை விமர்சித்தனர். எனினும் பிரகாஷ்ராஜ் தலைமையில் நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடும் அணி வலிமையாக உள்ளது. அவரை எதிர்த்து நடிகர் விஷ்ணு மஞ்சு தலைமையில் இன்னொரு அணி போட்டியிடுகிறது. விஷ்ணு மஞ்சு, பிரகாஷ்ராஜ் போட்டியிடும் அதே தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தெலுங்கு சினிமாவின் அதிகாரமிக்க நடிகரும், ரஜினியின் நண்பருமான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு. மகனின் வெற்றிக்காக மோகன்பாபுவும் களமாடுகிறார். இதனை பிரகாஷ்ராஜ் சுட்டிக் காட்டி பேசியிருந்தார். இதற்குத்தான் விஷ்ணு மஞ்சு பிரகாஷ்ராஜை எச்சரித்துள்ளார். ”மஞ்சு குடும்பத்தின் பிற உறுப்பினர்களை பிரகாஷ்ராஜ் தேவையில்லாமல் நடிகர் சங்கத் தேர்தலில் இழுக்கக் கூடாது, இதை கண்டிப்பாக சொல்லிக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

நாகார்ஜுனா போன்ற மூத்த நடிகர்கள் பிரகாஷ்ராஜை ஆதரிக்கிறார்கள். மறைமுகமாக பல முன்னணி நடிகர்களும் பிரகாஷ்ராஜுக்கு ஆதரவு அளித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் அடிப்படையில் கன்னடர் என்றாலும், இத்தனை வருடங்களாக தெலுங்கில் நடித்து அங்கேயும் நண்பர்களை சம்பாதித்துள்ளார். பிரகாஷ்ராஜும் அவரது அணியும் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
























