நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சாம் கரண் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகுவதால் அவருக்கு மாற்றாக மேற்கிந்தியத் தீவு அணியைச் சேர்ந்த வீரரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம்.
சாம் கரணுக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் டொமினிக் ட்ரேக்ஸ். மேற்கிந்தியத் தீவு அணியைச் சேர்ந்தவரான இவர் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். அது மட்டுமின்றி திறமையாக பந்து வீசக்கூடிய ஆல் ரவுண்டரும் ஆவார். 23 வயதாகும் டொமினிக் டிரேக்ஸ் சமீபத்தில் நடைபெற்ற சிபிஎல் போட்டியில் பிராவோ தலைமையிலான செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியில் விளையாடி, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அத்தொடரின் இறுதிப் போட்டியில் 24 பந்துகளில் 48 ரன்களை விளாசினார்.
சிபிஎல் தொடரின் 11 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக மும்பை அணி டொமினிக் டிரேக்ஸை வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான சாம் கரண் காயம் காரணமாக ஐபிஎல் மட்டுமின்றி நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். இன்றைக்கு பஞ்சாப் அணியுடன் நடைபெறும் லீக் இறுதி ஆட்டத்தில் ட்ராக்ஸ் விளையாடுவாரா என்கிற ஆவலில் பலரும் உள்ளனர்.
























