அண்மையில் எலும்புக்கூடுகளுடன் கூடிய கல்லறை ஒன்று முழுக்க தங்கக்கட்டிகளுடனும் தங்க ஆபரணங்களுடனும் இருப்பது போன்றதொரு புகைப்படம் இணையத்தில் வைரலாகிவந்தது. இந்தப் புகைப்படம் Historyinmemes என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலானது. இந்தப் புகைப்படம் தற்சமயம் பூமிக்குள் இதுபோன்ற இன்னும் வியப்பிலாழ்த்தும் பல அதிசயங்கள் புதைந்துள்ளன என்ற ஆர்வத்தை மனிதர்களிடையே கிளப்பியுள்ளது.
தகவல்களின் அடிப்படையில், இந்தக் கல்லறை உலகின் பழமையான கல்லறையான வெர்னா நெக்ரோபோலிஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலுள்ள கல்லறையிலிருந்து தான் தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இது முதல்முறையல்ல. இதற்கு முன்னமே இங்கிருக்கும் கல்லறைகளிலிருந்து தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளனவாம். கருங்கடல் பகுதியிலுள்ள இந்தக் கல்லறை ஒரு தங்கச் சுரங்கமாகவே பார்க்கப்படுகிறது. இதுவரை இந்தக் கல்லறைப் பகுதியிலிருந்து சுமார் 3,000 கலைப்பொருட்கள் மற்றும் தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கேரியாவின் தொல்பொருள் துறையின் கூற்றுப்படி, 1972ம் ஆண்டு இந்த இடத்தில் தொழிற்சாலை கட்டுமானப்பணியின்போது தோண்டப்பட்ட பள்ளங்களிலிருந்து தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தொழிற்சாலையினர் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அப்பொழுதுதுதான் இங்கு பல கல்லறைகள் இருப்பதும், அதில் தங்கங்கள் புதைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொல்லியல் துறையினர் இங்கு புதைக்கப்பட்டவர்கள் மிகவும் வசதிபடைத்த தலைவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். 36 என்ற எண் கொண்ட ஒரு கல்லறையிலிருந்து மட்டும் கிரீடம், காதணி, கழுத்தணி, கையணி உள்ளிட்ட 850 பொருட்களை தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனராம்.
தொல்லியலாளர்களின் ஆராய்ச்சிப்படி இந்தக் கல்லறைகள் கிமு 4560-4450 ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. தற்சமயம் வைரலான அந்தப் புகைப்படத்தில் இடம்பெறற கல்லறையின் எண் 46 என்றும், அதிலிருந்து மட்டும் சுமார் 6.5 கிலோ தங்கம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் காணப்படும் நபருக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம் என்றும், அவருடைய நீளம் 5 அடி 6-8 அங்குலம் இருக்கலாம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இதில் காணப்படும் கல்லறை நிச்சயம் மன்னரின் கல்லறையாகத்தான் இருக்கமுடியும் என்றும், ஒரு மன்னரிடம் மட்டுமே இவ்வளவு தங்கம் இருந்தாகவேண்டும் என்றும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


























