உலகப்புகழ் பெற்ற ‘பாப்’ இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அண்மையில்தான் அவர் தனது தந்தையின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாகத் திடீரென அறிவித்துள்ளார்.
பிரிட்னி ஸ்பியர்ஸ் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”நான் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்குவது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். எனது இந்தப் படம் குவென்டின் டரான்டினோவின் தற்காப்புக்கலை திரைப்படமான ‘கில்பில்’ படத்தைப்போல இருக்கும். படப்பிடிப்பின்போது உள்ள சவால் எனக்கு தெரியும், என் வாழ்வின் பாதியில் நான் கூண்டில் அடைக்கப்பட்ட விலங்கு போல இருந்ததாக உணர்கிறேன். அதனால்தான் இப்போது நான் இயக்குநராக முடிவு செய்தேன். இந்தப் படத்தில் எப்போதும் போல எனக்கு நானே மேக் அப் போடுவேன். நானே ஆடை அணிவேன். நானே இசை அமைப்பேன்” என அவர் கூறி உள்ளார்.

அந்தப் பதிவில் பிரிட்னி, ஒரு நிமிட நேரம் ஓடக்கூடிய அவரது ‘பிரேவ் நியூ கேர்ள்’ என்ற பாடலுடன் 2 வித்தியாசமான ஆடைகளில் நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இரண்டு மணி நேரத்தில் அந்த வீடியோவைத் தான் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
























