புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கருக்கலைப்பு சட்டவிதிகள் பல மாறுதல்களை கொண்டிருக்கிறது. அவற்றில் 24 வாரங்களுக்கு பிறகும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு கருகலைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கருக்கலைப்பு திருத்த சட்டம் மசோதா 2021ன் படி செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் புதிய கருகலைப்பு விதிகள் குறித்தும் காண்போம்.
- கருத்தரித்து 12 வாரங்களுக்கு பிறகு, கருக்கலைப்பு செய்ய வேண்டுமெனில் ஒரு மருத்துவரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்கு இடையே உள்ள காலக்கட்டத்தில் கருகலைப்பு மேற்கொள்ள இரண்டு மருத்துவர்களின் பரிந்துரையும் வேண்டும்.
- பாலியல் வன்புணர்வுக்குள்ளானவர்கள், முறை தவறிய உறவால் கருத்தரித்தவர்கள் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள், கருத்தரிப்புக்கு பின்னர் விவாகரத்தானவர்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிறக்கவிருக்கும் குழந்தை மாற்றுத் திறனாளியாகவோ, மன நல பாதிக்குள்ளான குழந்தையாக பிறக்கவிருப்பது கண்டறியப்பட்டால் அக்கருவை கலைத்து விடலாம்.
- மனித நேய அடிப்படையில் அரசு அறிவிக்கும் அவசர காலம் அல்லது பேரிடர் காலங்களில் பெண்கள் கருக்கலைப்பு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளை உள்ளடக்கிய கருக்கலைப்பு திருத்த சட்ட மசோதா 2021, கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய விதிகளின்படி, மாநில அளவில் மருத்துவ குழு அமைக்கப்படவிருக்கிறது. மாற்றுத் திறனாளியாகவோ அல்லது மன நல பாதிக்கப்பட்டோ குழந்தை பிறக்கவிருப்பது கண்டறியப்பட்டால், 24 வாரங்களுக்கு பிறகு கருகலைப்பு மேற்கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்பதை இக்குழுதான் முடிவு செய்யும். புதிய விதிகளின் கீழ் வரும் பெண்கள், இந்த மருத்துவ குழுவை அணுகலாம். அணுகிய மூன்றே நாள்களில், அப்பெண்ணையும் அவரின் மருத்துவ அறிக்கையையும் ஆராய்ந்து கருகலைப்பு மேற்கொள்ளும் கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா என்பதை இக்குழு தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
























