திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டு வேலை செய்யும் யாஸ்மினுக்கு ரூ.4.75 கோடி ஜிஎஸ்டி நிலுவை இருப்பதாக நோட்டீஸ் வந்துள்ளது. அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் சையத் காதரின் மனைவியான யாஸ்மினுக்கு சென்னை பூந்தமல்லி ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், முகப்பேர் கிழக்கில் 'டி.வி.எஸ். யாஸ் டிரேடர்ஸ்' என்ற நிறுவனத்தை அவர் நடத்துவதாகவும், 2024-25 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி ரூ.4,75,12,662 நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது; உடனடியாகச் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த யாஸ்மின், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். தமது ஆதார், பான் எண்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்தவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று அப்பகுதி மக்களும் வலியுறுத்துகின்றனர்.












