திமுக முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூரைச் சேர்ந்த இவர், 1989, 1996 தேர்தல்களில் திருவோணம் தொகுதியிலும், 2016-ல் ஒரத்தநாடு தொகுதியிலும் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில், 2001, 2006, 2011 என்று தொடர்ந்து மூன்று முறை வென்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை 3,642 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து கவனம் பெற்றார்.
மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தபோதும் எளிமையாக வாழ்ந்தவர் என்றும், உள்ளூர் கட்சியினரின் நிகழ்வுகளுக்கு இருசக்கர வாகனத்திலேயே சென்றவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.












