விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி இன்றுடன் 22 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், அவர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.
வடிவேல்-பவானி தம்பதியின் இரண்டாவது மகளான சிறுமி, அக்டோபர் 11-ம் தேதி பிறந்த நாளை உறவினர்களுடன் கொண்டாடினார். மறுநாள் அதிகாலை அவர் காணாமல் போனார். பெற்றோர் புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் தேடியும் பலனில்லாததால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கீதா தலைமையில் விசாரணை நடக்கிறது.
சிறுமியின் பெற்றோர், பாட்டி, சகோதரி, உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், கோயில் பூசாரி, ஜாதகம் எழுதியவர் உள்ளிட்ட பலரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் 3 செல்போன் கோபுரங்களில் பதிவான 600 அழைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. சிறுமி காணாமல் போன நாளில் இரவு முழுவதும் எரிந்த செங்கல் சூளையில் ஆய்வு செய்து, அதன் உரிமையாளர், தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் நேற்று ஒரு டிராக்டர் ஓட்டுநரும் விசாரிக்கப்பட்டார்.
சிறுமி பெற்றோர், பாட்டியுடன் ஒரே அறையில் தூங்கியபோதும் எப்படி வெளியே சென்றார், யாரேனும் கடத்திச் சென்றனரா என்ற கோணங்களிலும் விசாரணை தொடர்கிறது. எந்தத் தடயமும் கிடைக்காதது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












