தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
உச்சநீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. அதன் பிறகு அவரைக் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கிய நிலையில், அவர் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜராகி சரணடைந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவரைப் போலீசார் தேடி வந்தனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகை வசூலிக்கப்பட்டதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும் தி.மு.க. பிரமுகருமான அரசகுமார் ஏற்கனவே கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார்.
நீதிமன்ற அனுமதியுடன் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
















