வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை தவெக, திமுக உள்ளிட்ட ஒன்பது கட்சிகள் புறக்கணித்தன.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மற்றும் சிறப்பு முகாம்கள் குறித்து ஆலோசிக்க இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கியதும், தமிழக வெற்றிக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், ஆம் ஆத்மி, தேமுதிக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
பாஜக, அதிமுக, தேசிய மக்கள் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்றன.
சிறப்பு தீவிர திருத்த நடைமுறையில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் புறக்கணித்த கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்த நடைமுறையால் தமிழகத்தில் 74 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராகவும், ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.


















